Home /local-news /

அதிகரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே அறிவிக்கப்படாத மின்தடையால் அலறும் தேனி மக்கள்...

அதிகரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே அறிவிக்கப்படாத மின்தடையால் அலறும் தேனி மக்கள்...

Summer

Summer

Theni Power Cut | தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், பெரியகுளம், கூடலூர், கம்பம் போன்ற பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தேனி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது . மாவட்டத்தில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதாலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் பொதுமக்கள்.

    கோடை வெப்பம் :-

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் வெகு விரைவாகவே தொடங்கியது. ஏப்ரல் - மே மாதங்களில் தொடங்க வேண்டிய கோடை காலமானது இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திலேயே  தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைவில்லாமலே உள்ளது என்கின்றனர் தேனி வாசிகள்.

    தேனி, பெரியகுளம், சின்னமனூர், கூடலூர் போன்ற பகுதிகளில் ஒரு சில நாட்களாக கன மழை பெய்தாலும் கூட, அன்றைய நாளில் வெப்பத்தை அந்த மழை தணித்த போதிலும் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    தற்போது மழைப்பொழிவு சுத்தமாக இல்லாத நிலையில் தேனி மாவட்டத்தில் மீண்டும் வெளியில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற்பகல் வேளையில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

    காவல்துறையினருக்கு பழச்சாறு :-

    தேனி நகரில் சுமார் 95 டிகிரிக்கும் மேல் வெயில் தாக்கம் உள்ளது . இதனால், சாலையோர வியாபாரிகள், உணவு மற்றும் வணிக பொருள் டெலிவரி செய்யும் நபர்கள், அலுவலக வேலைக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர், பாதசாரிகள், காவல்துறை அதிகாரிகள் , போக்குவரத்து காவலர்கள் என பலரும் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கோடைகாலத்திலும் பணியாற்றும் காவலர்களுக்கு, வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடவும், உடல் சோர்வை போக்கும் விதமாகவும் கோடை காலம் முடியும் வரை , தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர், போடிநாயக்கனூர், பெரிய குளம் போன்ற பெருநகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் பலரும் வெயிலுக்கு குடை பிடித்தபடியும், தலையில் முக்காடு போட்டபடியும் சென்றதை பார்க்க முடிந்தது.

    கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் தங்களுடைய தாகம் தணிக்கவும், வெப்பத்தை தணிக்கவும் குளிர்பானக் கடைகள், பழச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சாலையோரம் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, மோர், தர்பூசணி பழங்கள், கம்பங்கூழ் விற்பனை செய்யும் இடங்களிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று அவற்றை வாங்கி சாப்பிட்டனர்.

    மின்தடையால் அவதி :-

    நண்பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், கோடை காலத்தை எதிர்கொள்வது குறித்து மக்களிடம் தற்போதே அச்சம் ஏற்படத் தொடங்கி விட்டது. அவ்வப்போது கோடை மழை பெய்தால் மட்டுமே கோடை காலத்தை சமாளிக்க முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.

    மேலும் கோடை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், பெரியகுளம், கூடலூர், கம்பம் போன்ற பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இரவு நேரத்திலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் மிகுந்த சிரமத்தில் உள்ளதாக கூறுகின்றனர் தேனி வாசிகள். மின்சார துறையினர் கோடைக்காலத்தில் ஏற்படும் மின்தடையை குறைத்து பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Power cut, Theni

    அடுத்த செய்தி