Home /local-news /

கூடலூர் 'திரிசூல வடிவ' காளியம்மன் கோயிலில் வேண்டியவை உடனே நிறைவேறும் அதிசயம் - முழு விவரம்

கூடலூர் 'திரிசூல வடிவ' காளியம்மன் கோயிலில் வேண்டியவை உடனே நிறைவேறும் அதிசயம் - முழு விவரம்

Kalaiyamman

Kalaiyamman temple 

தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில், திரிசூல வடிவிலேயே காளியம்மனை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில், திரிசூல வடிவிலேயே காளியம்மனை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் இக்கோயிலின் புகழ் தேனி மாவட்டத்தில் வெகு விரைவாக பரவி வருகிறது .


    ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் :-

    தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. கூடலூர் வ.உ.சி தெருவில் அமைந்துள்ள இந்த காளியம்மன், மிகுந்த வரப்பிரசாதி கொண்டாதாகவும் கேட்ட வரங்களை நிறைவேற்றி கொடுப்பவளாகவும் நம்பப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் விருப்ப தெய்வமாக உள்ளது இந்த காளியம்மன் கோயில் .

    இக்கோயிலில் உள்ள காளி, அம்பிகை ரூபத்தில் இல்லாமல், அம்பிகையின் பிரதான ஆயுதமான திரிசூலத்தின் வடிவில் உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். மக்களைக் காக்கும் அருட் பணியைச் செய்யும் தெய்வங்களுக்கு உறுதுணையாக இருப்பவை அவர்களது ஆயுதங்கள் என ஆன்மீக வட்டாரங்களில் பேசப்படுவது வழக்கம்.

    இதன் காரணமாகத் தான் அனைத்து தெய்வங்களும் ஆயுதங்கள் உடனேயே காட்சி தருகின்றனர். இங்கே பக்தர்களைக் காத்தருளும் ஸ்ரீ காளியம்மன் அவளுக்குரிய திரிசூலத்தின் வடிவிலேயே இருந்து அருளாட்சி புரிவதால் இந்த கோயில் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. காளியின் பிரதான ஆயுதமான திரிசூலத்தை வழிபடும் மக்கள், கேட்ட வரங்கள் உடனடியாக பெற்று தரும் என்பது இவர்களின் முழு நம்பிக்கையாக உள்ளது.

    இக்கோயிலில் அபிஷேக, ஆராதனைகள் பூஜைகள் இந்த திரி சூலத்திற்கே செய்யப்படுகின்றன. திருவிழாக் காலங்களில் மட்டும் சூலத்திற்கு அம்பிகை போல முக அமைப்பு கொண்ட அலங்காரம் செய்யப்பட்டு, அம்பாளை வணங்கி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.


    திரிசூல வழிபாடு :

    கூடலூர் பகுதியில் ஒரு சில குறிப்பிட்ட சமுதாய மக்கள் ஒன்றிணைந்து கடவுளை வழிபட்டு வந்த சமயத்தில், திரிசூலத்தில் காளியை வழிபட இப்பகுதி மக்களுக்கு கனவில் அம்பிகை கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து கூடலுர் பகுதியைச் சேர்ந்த வ உ சி வெள்ளாள பெருமக்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் திரிசூல வடிவிலான காளி கோயிலை 12 வருடங்களுக்கு முன்பாக கட்டினர்.


    பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதியின் கூற்று. அதனடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டு 12 ஆண்டுகளை கடந்த பின்பு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

    ஏப்ரல் 26ம் தேதி கும்பாபிஷேக விழா, காப்பு கட்டி, முளைப்பாரி பயிரிடுதலுடன் இந்த கும்பாபிஷேக விழா தொடங்கியது. தினமும் மாலை வேளையில், பெண்கள் முளைப்பயிருக்கு, 'கும்மி' கொட்டி வழிபட்டனர். கும்பாபிஷேக வைபவம், நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

    3 கால பூஜைகளுக்குப் பின், இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில், கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. புனித தீர்த்தம் வைக்கப்பட்ட கும்ப கலச தீர்த்தங்களை, ' ஓம் சக்தி'.. 'பராசக்தி'.. என்ற கோஷங்கள் முழங்க கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பால், பன்னீர், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் நடந்தன. பின்னர், அம்பிகைக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது .

    நேர்த்திக்கடன் :-

    ஆயுதமே இங்கு தெய்வமாக வழிபடுவதால், இங்கு வேண்டிக்கொள்ள, தோஷங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் நடக்கும் என்பது ஒரு சமூகத்தை சேர்ந்த பக்தர்களின் நம்பிக்கையாக மட்டுமில்லாமல், தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் நம்பிக்கையாய் இருப்பதால் , இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.

    பயணம் தடையின்றி தொடர, வெளியூர், வெளிநாடுகளில் இருப்போர் பாதுகாப்புடன் பணிபுரிய, காரியத்தடை நீங்க, எடுத்த காரியத்தில் வெற்றி பெற, குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, என பல பிரார்த்தனைக்காகவும் பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஸ்ரீகாளியம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து, அதை அபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை நிறைவில் இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மஞ்சள் நீராட்டு விளையாடி மன நிறைவுடன் இல்லத்திற்கு சென்றனர். இவ்விழாவின் ஏற்பாடுகளை வ.உ.சி., வெள்ளாள பெருமக்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    இதுகுறித்து கோவில் அர்ச்சகரான ராஜேந்திரன் கூறுகையில்,\" ஒவ்வொரு கடவுளுக்கும் தங்களது ஆயுதமே பிரதானம். அதிக ஆற்றல் கொண்ட காளியின் ஆயுதம் பற்றி விவரிக்கவே மெய்சிலிர்க்கிறது. காளியின் பிரதான ஆயுதத்தை வழிபட வேண்டும் என்பது காளி எங்களுக்கு இட்ட கட்டளை. அதன்படி அன்று முதல் இன்று வரை காளியின் ஆயுதத்தை கடவுளாக வழிபட்டு வருகிறோம். என் மூலம் எங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துக் கொண்டுதான் உள்ளது " என்றார்.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி