தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தல் :-
தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லை மாவட்டமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு நியாயவிலைக் கடைகளின் மூலம் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழகப் பகுதியில் இருந்து அண்டை மாநிலமான கேரளா பகுதிக்கு தேனி மாவட்டத்திலிருந்து வாகனங்களிலும், மலைப்பாதை வழியே தலைச்சுமையாக கொண்டு சென்று அங்கு விற்பனை செய்கின்றனர்.
இதில் அதிக லாபம் கிடைப்பதால் தேனி மாவட்டத்தில் இருந்து அவ்வப்போது இந்த ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. உத்தமபாளையத்தில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்த ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அரிசி பதுக்கல் :-
இதனிடையே தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 200 கிலோ கோதுமை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் தண்ணீர் தொட்டி பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் கூடலூர் நகர காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் பிரகாஷ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 200 கிலோ கோதுமை சிக்கியது.
காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பிரகாஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.