Home /local-news /

கேரள வனத்துறையினர் கெடுபிடி.. கண்ணகி கோவிலுக்கு சாலை அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை..

கேரள வனத்துறையினர் கெடுபிடி.. கண்ணகி கோவிலுக்கு சாலை அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை..

Meeting 

Meeting 

MangalaDevi Kannagi Amman Temple | தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று குமுளி அருகே வண்ணாத்திப்பாறை மலையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடை பெறுவதற்கான ஆலோசனை கூட்டம்  உத்தம் பாளையம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களும் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்வைத்தனர்.

    ஆலோசனை கூட்டம் :-

    தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று குமுளி அருகே வண்ணாத்திப்பாறை மலையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    தமிழகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற இக்கோவிலுக்கு மக்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் பளியங்குடி வழியாக மலைப்பாதையில் ஆறு கிலோமீட்டர் நடந்தும், குமுளி பகுதியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக ஜீப்பில் சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கோவிலுக்கு செல்லலாம்.

    கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக கண்ணகி கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடை பெறுவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் இன்று உத்தமபாளையம் கோட்டாட்சியர் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது.

    கோரிக்கைகள் :-

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா, கண்ணகி அறக்கட்டளை பிரதிநிதிகள், காவல்துறையினர், வருவாய் துறையினர் , சுற்றுலா துறையினர், போக்குவரத்து துறையினர், வனத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறையினர், தீயணைப்புத்துறையினர் கலந்து கொண்டு அரசு அதிகாரிகள் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், செய்யப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.

    இக்கூட்டத்தில், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை அரசு அதிகாரிகளிடம் முன்வைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, கண்ணகி கோவில் மலைப்பகுதியில் தமிழகத்திற்கு சொந்தமான சாலை அமைப்பது, கூடுதல் காவல்துறை அதிகாரிகள் நியமிப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேலும் அரசு அதிகாரிகள் கண்ணகி கோவில் திருவிழா அன்று கோவில் அமைந்துள்ள மலை பகுதிக்கு செல்வதற்கான வாகனங்கள் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும், தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்கள் இல்லாமல் கண்ணகி கோவிலுக்கு செல்வதற்காக அறக்கட்டளையினரின் உதவியை நாடியே செல்வதாகவும் கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

    மேலும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் கடந்த காலங்களில் 6 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை வைத்தனர்.

    சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை குறைத்து, கோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், பொதுமக்களின் வசதிக்காக நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    ஒரே நாளில் 25 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் :-

    தொடர்ந்து காவல்துறை சார்பாக பேசிய காவல் ஆய்வாளர் லாவண்யா, \" கடந்த காலங்களில் தமிழக மக்கள் மட்டும் கண்ணகி கோவிலுக்கு மலைப்பாதை வழியாக 8000 நபர்களும், ஜிப் பாதையில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் செல்வதாகவும் கூறினார். கடந்த காலங்களில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும் கூறினார்

    கொக்கரக்கண்டம் பகுதியில் கடும் நெருக்கடி இருப்பதால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் கூட, வருவாய்த் துறையினர் மற்றும் பிற துறையினர் கூடுதலாக பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

    பொதுமக்களுக்கும், காவல்துறையினரும், பிற அதிகாரிகளுக்கும் சுகாதார வசதி, உணவு வசதி, குடிநீர் வசதி முறையாக ஏற்படுத்திட வேண்டும் எனவும், கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், பணி முடிந்து திரும்பி வரும் வேளையில் வாகனங்கள் இல்லாததால் நடந்து வரும் சூழல் உள்ளதால் கூடுதல் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் கூறினார்.


    ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் ஆர்டிஓ கௌசல்யா கூறுகையில்,
    \" கண்ணகி கோவில் திருவிழாவிற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதில் கண்ணகி அறக்கட்டளையினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

    அது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக போக்குவரத்து, நடைபாதையில் பக்தர்களுக்கு கேரள வனத் துறையால் ஏற்படுத்தப்படும் கெடுபிடிகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பிரச்சினைகள் அனைத்தும் களைவதற்காக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கண்ணகி கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து இரு மாநிலங்களின இடுக்கி மற்றும் தேனி மாவப்ப ஆட்சியர்கள் தலைமையிலான அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மார்ச் 30ம் தேதி நடத்தப்பட்டு கண்ணகி கோவில் திருவிழா சுமுகமாகவும் பக்தர்களின் சிறப்பான தரிசனத்திற்காக அமைதியான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்\" என்றார்

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி