கூடலூர் நகராட்சியில் உள்ள பல வார்டுகளில் கடந்த சில நாட்களாக தெருக்களிலும் வீடுகளிலும் வந்து குப்பை சேகரிப்பதில் நகராட்சி பணியாளர்கள் அலட்சியம் காட்டுவதால், பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
தேங்கும் குப்பை :-
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளுக்கு நகராட்சி தூய்மைப் பணியாளர்களை குழுக்களாக பிரித்து, அந்தக் குழுக்கள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று வீடு மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவர்.
ஆனால், கடந்த சில நாட்களாக கூடலூர் நகராட்சியில் பல இடங்களில் குப்பைகளை அகற்றாமல் உள்ளதால், குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. குறிப்பாக கூடலூர் நகரின் முக்கிய பகுதியான மெயின் பஜார் அருகே உள்ள குள்ளிக் கவுண்டர் தெருவில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குப்பை அள்ளுவதில்லை என குற்றச்சாட்டு நிலவுகிறது.
மேலும், கூடலூரில் உள்ள சில வார்டுகளில், தினசரி வந்த குப்பை வண்டியானது, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல இடங்களில் குப்பைகளை அகற்றுவதில் நகராட்சி பணியாளர்கள் அலட்சியம் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பாரபட்சம் காட்டுவதாக கூறுகின்றனர். தினசரி நகராட்சி சார்பில், குப்பை வண்டிகள் வராத காரணத்தினால் பல இடங்களில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
" கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே, தினசரி வரவேண்டிய குப்பை வண்டியானது வருவதில்லை. பொங்கல் பண்டிகையில் இருந்து தற்போது வரை குப்பைவண்டி சரிவர வருவது இல்லை. குப்பைகள் தேங்குவதால், குப்பைகளில் ஈக்கள் மொய்ப்பது உடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் குப்பைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் அதிலிருந்து நோய் பரவும் வாய்ப்பு உண்டு. எனவே கூடலூர் நகராட்சி பணியாளர்கள் விரைந்து குப்பைகளை அகற்றவும், தினசரி குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.