தேனி மாவட்ட விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ளது நெல் விவசாயம். மாவட்டத்தில் தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலே செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சில நிர்வாக காரணங்களுக்காக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது.
கூடலுார் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திர பற்றாக்குறை, சுமை தூக்கும் தொழிலாளி பற்றாக்குறை காரணமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகளிடம் வாங்கிய நெல் மற்றும் விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 20 டன் நெல் ஆகியவை ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, அறுவடை செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. நெல் குவித்து வைக்கப்பட்டிருந்த இடமும் மழையில் நனைந்து சேறும் சகதியுமாக உள்ளதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளதால் கூடலூர் தாமரைக்குளம், வெட்டுக்காடு, ஒட்டான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை நிலைக்கு தயாராக உள்ள நெல்மணிகளை கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் விவசாயிகள்.
இதனால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.