ஹோம் /Local News /

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா முதல் மின்தடை வரை.. இன்றைய தேனி மாவட்ட செய்திகள் (24/4/22)

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா முதல் மின்தடை வரை.. இன்றைய தேனி மாவட்ட செய்திகள் (24/4/22)

Theni news

Theni news

Theni District | இன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

இன்று (24/4/22) தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தவர் மரணம்:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குலாலர்பாளையம் கிராமம் ரெங்கசாமி தெருவில் வசித்து வரும் மனோகரன் என்பவரின் மனைவியான நாகேஸ்வரி சித்தாள் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல சித்தாள் வேலை செய்து வரும் இவர் அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருந்த நாகேஸ்வரி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாகேஸ்வரியை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் காப்பு கட்டும் நிகழ்வு :-

தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 5 முதல் மே 17 வரை நடக்க உள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி கம்பம் நடப்பட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை துவங்கியது. வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கமான ஒன்று. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருப்பதும் வழக்கம். இந்த நிலையில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் முதல் அம்மனை தரிசனம் செய்து காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர்.

தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்து தற்போது வரை காப்பு கட்டி வைக்கின்றனர் பக்தர்கள். இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட கணேசன் தலைமையிலான 10 அர்ச்சகர்கள் சுழற்சி, முறையில் பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு காப்புக்கட்டுகின்றனர்.

கண் தானம் :-

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த பேட்மின்டன் வீரரான49 வயதாகும் ராதாகிருஷ்ணன் கண் தானத்திற்கு பதிவு செய்து இருந்தார். சமூக ஆர்வலரான இவர் கண் தானம் பற்றிய சிறப்புகளை நண்பர்கள், வியாபாரிகளிடம் விளக்கி கூறுவார். இதனால் பலர் கண் தானம் செய்ய பதிந்துள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ராதாகிருஷ்ணன் நெஞ்சுவலியால் இறந்தார். இவரது இரு கண்களையும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானம் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழா :-

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது, கல்லூரி செயலாளர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராமகிருஷ்ணன் தலைமையிலும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது .

கல்லூரி முதல்வர் ரேணுகா வரவேற்புரை ஆற்றிய பின்னர்

தேனி மாவட்ட ஆட்சியரான முரளிதரன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, 2016 - 2019 ஆம் கல்வியாண்டில் படித்த 442 மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கினார்.

விழாவில் இணைச்செயலர் என்.ஆர்.வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் மற்றும் கல்லூரி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பேராசிரியைகள் மாணவிகள் மாணவிகளின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

மா விளைச்சல் :-

தேனி மாவட்டத்தில் அதிகளவில் நெல், வாழை, திராட்சை போன்ற விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இவைகளுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் பெருமளவு மா விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே செந்தூரம், கள்ளாமை, இமாமஸ், அல்போன்சா, காளபாடி, பங்காள வெள்ளி, இதற நாட்டு மா வகைகள் மற்றும் வெளிநாட்டு வகை மா - வும் பயிரிடப்படுகிறது. 5 முதல் 6 மாத கால பயிரான மாம்பழ சீசன் ஏப்ரல் மே மாதங்களில் தொடங்கும். ஏப்ரல் மே மாதங்களில் மா விற்பனை அமோகமாக நடைபெறும்.

தற்போது கம்பம் பகுதிகளில் மா விளைச்சல் நன்றாக இருந்தாலும், தற்போது விளைந்து இருக்கக்கூடிய அளவைக் காட்டிலும் அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக மரத்தில் உள்ள பூக்கள் முழுவதும் உதிர்ந்து விட்டதால் போதிய விளைச்சளை விவசாயிகளால் இந்த ஆண்டு பெற முடியவில்லை. ஆட்கூலி உயர்வு, உர விலை உயர்வு, சீரற்ற மழை போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான விளைச்சலை மட்டுமே விவசாயிகளால் எடுக்க முடிந்தாகவும் கூறப்படுகிறது.

சுருளி அருவி :-

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி கடந்த சில மாதத்திற்கு முன்னதாக திறக்கப்பட்ட நிலையில், சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது

மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, மழை நேரத்தில் பொழுது மட்டுமே சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. தற்போது மழை பொழிவு இல்லாத காரணத்தினால் அருவியில் குறைந்த அளவிலான

நீர் வரத்தே உள்ளது. சுருளி அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும் கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கோடைகாலத்தை சமாளிக்க வார இறுதி நாட்களில் அதிக அளவிலான பெண்கள், குழந்தைகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் அருவி பகுதிக்கு வர தொடங்கி உள்ளனர்.

அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருத்தல் கட்டாயம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்

மின்தடை :-

கோடை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், பெரியகுளம், கூடலூர், கம்பம் போன்ற பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இரவு நேரத்திலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் மிகுந்த சிரமத்தில் உள்ளதாக கூறுகின்றனர் தேனி வாசிகள். தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளதாக கூறுகின்றனர் பொதுமக்கள். மின்சார துறையினர் கோடைக்காலத்தில் ஏற்படும் மின்தடையை குறைத்து பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது

செய்தியாளர்: சுதர்ஸன்

First published:

Tags: Theni