Home /local-news /

அறிவிக்கப்படாத மின்தடை முதல் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் வரை... இன்றைய தேனி மாவட்ட முக்கிய செய்திகள்...

அறிவிக்கப்படாத மின்தடை முதல் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் வரை... இன்றைய தேனி மாவட்ட முக்கிய செய்திகள்...

Theni news

Theni news

Theni District Headlines - April 21 | தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகள் ஒருசில வரிகளில்..

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகள் ஒருசில வரிகளில்..

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :-

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் , சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊர்ப்புற நூலககர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி அறிவித்துள்ள நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் , சாலைப் பணியாளர்களின் நாற்பத்தி ஒரு மாத பணிநீக்க காலத்தை பணிவரன்முறை செய்து தரவேண்டும் , இருபத்தி ஒரு மாத ஊதிய மாற்ற நிலுவை வழங்கிட வேண்டும் , புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் , 2 ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனோ சிகிச்சைக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன . ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி வட்ட கிளை செயலாளர் பாரதிதாசன் தலைமையில் மருத்துவத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்

    மின்தடை அதிகரிப்பு :-

    கோடை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், பெரியகுளம், கூடலூர், கம்பம் போன்ற பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இரவு நேரத்திலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் மிகுந்த சிரமத்தில் உள்ளதாக கூறுகின்றனர் தேனி வாசிகள். மின்சார துறையினர் கோடைக்காலத்தில் ஏற்படும் மின்தடையை குறைத்து பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது .

    வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் :-

    தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.‌ விழாவின் இரண்டாம் நாளில் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்ற முடிந்தது.

    இன்று முதல் 21 நாட்கள் விரதத்திற்கு பின் மே 10முதல் 17ஆம் தேதி வரை இரவு - பகலாக நடைபெறும் திருவிழாவில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்வார்கள்.
    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்துள்ளனர்.

    தற்போதைய வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் விழாக்காலம் களைகட்டி உள்ளதால், ஏராளமான பக்தர்கள் தினசரி கோயிலுக்கு வந்து கௌமாரி அம்மனை தரிசித்து சென்று வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது இத்திருவிழா . விழாவில் மூன்றாவது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து கௌமாரி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    நைட்டிங்கேல் சிலை வைக்க எதிர்ப்பு :-

    தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்களின் தாய் என்று அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலையை நிறுவுவதற்கான பூமிபூஜை நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் தினம் கொண்டாடுவதற்காக நைட்டிங்கேல் சிலையை செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகளின் குடியிருப்புக்கு அருகே நிறுவ, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர் கண்காணிப்பாளர் முயற்சித்து அதற்கான பூமி பூஜை கடந்த வாரம் போட்டதாகவும் இப்பணிக்காக ஒவ்வொரு செவிலியரிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் கட்டாய வசூல் செய்ததாகவும் தேனி அரசு மருத்துவ செவிலிய கண்காணிப்பாளர் ஜோஸ்மின் ஜென்னி மீது புகார் எழுந்தது.

    இதையடுத்து நைட்டிங்கேல் சிலையை நிறுவுவதை எதிர்த்து இந்து எழுச்சி முன்னணி சார்பில் இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை வளாகத்தில் அரசு அனுமதியின்றி எந்த ஒரு சிலையும் நிறுவ அனுமதிக்கமாட்டேன் என்வும், செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    நலத்திட்ட உதவி :-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் பகுதியில் இம்பா அமைப்பின் சார்பாக குள்ளபுரம் வெள்ளாலர் சமுதாய கூடத்தில் இம்பா அமைப்பு மாநில செயலாளர் ரவிப்பிள்ளை குளிர்சாதனபெட்டியை குள்ளபுரம் வெள்ளாளர் உறவின்முறையை சார்ந்த 100குடும்பங்கள் பயன்படும் விதமாக வழங்கினார். இந்த விழா திமுக ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி மற்றும் குள்ளபுரம் வெள்ளாளர் உறவின்முறை பொருளாளர் கண்ணாயிரம்பிள்ளை தலைமையில நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தேனி மாவட்ட அனைத்து இம்பா சங்க நிர்வாகிகள்,குள்ளபுரம் வெள்ளாளர் உறவின்முறை சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.

    காட்டு யானையால் அச்சம் :-

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மேகமலையில் ஒற்றைக் காட்டுயானை குடியிருப்புகளுக்கு அருகே சுற்றித்திரிவதால் மலைக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சின்னமனூர் அருகே ஹைவேவிஸ்
    பேரூராட்சியில் 7 மலைக்கிராமங்களில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலைக் கிராமத்தினர் வசிக்கின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள
    மேகமலை குடியிருப்புப் பகுதிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த ஒற்றை யானை இப்பகுதியிலேயே சுற்றித்திரிகிறது.

    இந்த யானை ஹைவேவிஸ் நீர்த்தேக்கப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதைப் பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒருசில இளைஞர்கள் அதை தங்களது கைப்பேசியில் படம் பிடித்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், \" ஹைவேவிஸ், மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகாராஜாமெட்டு மற்றும் இரவங்கலார் பகுதிகளில் அந்த காட்டுயானை உலா வருகிறது. இதனால், தேயிலைத் தோட்டங்களுக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடனே சென்று வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதை அடர் வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    தீத்தொண்டு விழிப்புணர்வு :-

    தேனி மாவட்டம் கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தொண்டு வார விழாவையொட்டி தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கல்யாணகுமார் கலந்து கொண்டு தீ பரவும் விதம், அதனை அணைக்கும் விதம் குறித்து பேசினார். பின்னர் தீயணைப்பு கருவிகளை கையாளும் விதம், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் விதம், முதலுதவி ஆகியவை குறித்து கம்பம் தீயணைப்பு படையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பாக தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தீயணைப்பு முறைகள் பற்றிய விளக்கம் கடமலைக்குண்டு பாரததேவி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு குழுவினர் செய்முறையோடு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி