Home /local-news /

கூடலூர் : கதிகலங்க வைக்கும் காட்டு யானைகள் - பீதியில் பொதுமக்கள்

கூடலூர் : கதிகலங்க வைக்கும் காட்டு யானைகள் - பீதியில் பொதுமக்கள்

Elephant attack 

Elephant attack 

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால், மலைப் பகுதியை ஒட்டியுள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    காட்டுயானைகள் :-

    கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது தேனி மாவட்டம். குறிப்பாக போடி, கம்பம், கூடலூர், தேவாரம், கோம்பை,
    குள்ளப்பகவுண்டன்பட்டி,
    லோயர்கேம்ப், என மலையடிவாரங்களை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், அதிகமாக உள்ள மாவட்டம் ஆகும்.

    இந்நிலையில், வனப்பகுதியில் வசிக்கும் காட்டு விலங்குகளான மான், யானை போன்ற விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு
    வெளியேறி மலையடிவாரங்களில் சுற்றித் திரிகிறது.

    இதனை தடுப்பதற்காக வனத்துறையினரால் மலையடிவார வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலிகள், அகழிகள் வெட்டப்பட்டும் உள்ளது. இதனால் காட்டு விலங்குகள் அகழிகளை கடந்து வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வராமல், திரும்ப வனப்பகுதிகளுக்குள் சென்று விடும். இருந்தபோதிலும் சில காட்டு விலங்குகள் ஊர் பகுதிக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

    அச்சத்தில் மக்கள் :-

    தேனி மாவட்டத்தில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. சின்னமனூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி, நரி போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

    தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டுயானை உட்பட காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. தேவாரம் பகுதியில் மட்டும் காட்டு யானையால்
    இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே உள்ள பழியங்குடி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். மேலும், கூடலூர் அருகே உள்ள மின் நிலையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப் போன்ற மலையடிவார பகுதிகளை ஒட்டி காட்டு விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விளைநில பயிர்களை
    சேதப்படுத்துவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    மின் நிலையம் :-

    கூடலூர் அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்தில் 70 குடும்பங்களுக்கு மேலாக மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மட்டுமே யானைகளின் அட்டகாசம் இருந்து வந்தது. இரவில் குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானை அதிகாலை நேரத்தில் காட்டுக்குள் சென்று விடுவதை வழக்கமாக வைத்து இருந்தது. ஆனால் தற்போது பகல் நேரத்திலும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சுருளியாறு மின் நிலையம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை கூட்டமாக வந்த யானைகள் அவரை வழி மறைத்து உள்ளது.

    இதனால் பயந்த அவர் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதேபோன்று இரவு நேரத்தில் சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கம்பம் நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்தை காட்டுயானைகள் வழி மறைத்ததால் அந்த பேருந்து கம்பம் செல்லாமல் மின்நிலைய பகுதியிலேயே நிறுத்தப்பட்டது . இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் மின் நிலையத்தில் வசிக்கும் பொதுமக்கள் காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.


    இதுகுறித்து லோயர் கேம்ப் பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில்,
    \" காட்டு விலங்குகள் வராமல் அமைக்கப்பட்ட மின் வேலிகள் ஆங்காங்கே அறுந்து கிடப்பதால் காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற விலங்குகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    மேலும், மின் வேலிகள் தாழ்வான நிலையில் இருப்பதால் எந்நேரமும் வீட்டில் உள்ள குழந்தைகளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, வனத்துறையினர் மின் வேலியை சரி செய்யவும், காட்டு விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறோம் \" என்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Karthick S
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி