கம்பம் திமுக வடக்கு நகர செயலாளரின் மனைவி வனிதா நெப்போலியன், கம்பம் நகர மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்முனை போட்டி :-
தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் இடையே போட்டி நிலவி வந்தது . இந்த நிலையில் கம்பம் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தலைமை அறிவித்து, கம்பம் நகர மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் திமுகவைச் சேர்ந்த வனிதா நெப்போலியன் .
கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளுக்கான நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.
கம்பம் நகர் திமுகவில் கம்பம் வடக்கு நகரம், கம்பம் தெற்கு நகரம் என இரு நகரக் செயலாளர்கள் உள்ளனர் . கம்பம் வடக்கு நகரத்தில் 19-வார்டுகளும், கம்பம் தெற்கு நகரில் 14-வார்டு களும் ஒதுக்கப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவைச் சேர்ந்த இரு நகர செயலாளர்களும் களப்பணியை செய்து தேர்தலை சந்தித்தனர்.
கம்பம் நகரமன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கம்பம் வடக்கு நகர செயலாளரான துரை நெப்போலியனின் மனைவி வனிதா 3வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் திமுக தெற்கு நகரச் செயலாளரான செல்வக்குமாரின் மனைவி சுனோதா 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேபோல தங்க தமிழ்ச்செல்வனின் தீவிர ஆதரவாளரான வீரபாண்டியனின் மனைவி சுந்தரி 7வது வார்டில் போட்டியிட்டு அவரும் வெற்றி பெற்றார். இதனால் திமுக நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதில் மும்முனைப் போட்டி நிலவுவதாக பார்க்கப்பட்டது.
வேட்பாளர் தேர்வு :-
தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில்கம்பம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வனிதா நெப்போலியனை வேட்பாளராக தலைமை அறிவித்தது. கம்பம் தெற்கு நகரச் செயலாளரான செல்வக்குமாரின் மனைவி சுனோதா துணை தலைவராகவும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற நகரமன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் வனிதா நெப்போலியன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட எதிர் வேட்பாளர் இல்லாததால் போட்டியின்றி வனிதா நெப்போலியன் கம்பம் நகர தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதைப்போல சுனோதா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு கம்பம் நகரை கைப்பற்றுவதில் மும்முனை போட்டி நிலவி வந்த நிலையில், கம்பம் நகர மன்றத் தலைவராக தேர்வாகியுள்ளார் வனிதா நெப்போலியன்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.