Home /local-news /

கம்பம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பாதை மூடல் - பெண்கள் சுவர் ஏறி குதிக்கும் அவலம்

கம்பம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பாதை மூடல் - பெண்கள் சுவர் ஏறி குதிக்கும் அவலம்

Cumbum

Cumbum government hospital 

Cumbum அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கான பாதை மூடப்பட்டு உள்ளதால், அவசர தேவைக்காக சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி. பிரசவ வார்டு பாதையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை 

    கம்பம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கான பாதை மூடப்பட்டு உள்ளதால், அவசர தேவைக்காக சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி. பிரசவ வார்டு பாதையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

    கம்பம் அரசு மருத்துவமனை :-

    தேனி மாவட்டத்தில் கம்பம் அரசு மருத்துவமனை முக்கிய மருத்துவமனையாக உள்ளது.
    தேனி அரசு மருத்துவமனை கல்லூரியில் அதிக அளவிலான பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. தேனி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பிரசவங்கள் கம்பம் அரசு மருத்துவமனையில்தான் பார்க்கப்பட்டு வருகிறது.

    கம்பம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களும், கேரள மலைவாழ் மக்களும் கம்பம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதி உள்ளதால் பெரும்பாலானோர் கம்பம் அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக பயன்படுத்துகின்றனர்.

    குறிப்பாக கம்பம், கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான கர்ப்பிணி பெண்கள் இங்கு பிரசவம் பார்த்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் விதமாக மருத்துவர்கள் பகல், இரவு என சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.

    கம்பம் அரசு மருத்துவமனையில் தேவையான டாக்டர்கள், மயக்கவியல் நிபுணர்கள், ஆக்சிஜன், ரத்த வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

    இந்த மருத்துவமனையில் மட்டும் மாதம் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் பிறக்கின்றதாகவும், அதிலும் குறிப்பாக கேரள பெண்கள் அதிக அளவில் பிரசவம் பார்த்து செல்வதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    பிரசவ வார்டு :-

    இந்த நிலையில் பிரசவ வார்டு பகுதி அரசு மருத்துவமனையின் பின்புறத்தில் அமைந்துள்ளது. பிரசவ வார்டு பகுதிக்குச் செல்வதற்கென பிரத்தியேகமாக மருத்துவமனை வளாகத்தில் தனி பின்புற நுழைவு வாயில் உள்ளது . இந்த பாதையை பிரசவ வார்டுக்கு செல்லும் பெண்களும், அவர்களது உறவினர்களும் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் மருத்துவமனைக்கு வரும் நபர்கள் தங்களது உறவினர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் சமீப காலமாக பிரசவ பிரிவிற்கென பிரத்தியேகமாக உள்ள பின்புற நுழைவு வாயிலை மருத்துவ நிர்வாகத்தினர் மூடி வைத்துள்ளனர்.

    கம்பம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டுமென்றால், மெயின் நுழைவாயில் சென்று மருத்துவமனையின் பின்புறத்தில் அமைந்துள்ள பிரசவ வார்டுக்கு சென்று பிரசவம் பார்க்கும் நிலை உள்ளது.

    பிரசவ வார்டிற்கென தனியாக பாதை இருக்கும் நிலையில், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் ஊர்திகளும், வலியால் துடித்து பிரசவ பிரிவிற்கு செல்லும் பெண்களும் மருத்துவமனையின் மெயின் நுழைவுவாயில் 400 மீட்டர் சுற்றியே செல்கின்றனர்.

    குறிப்பாக பிரசவ வார்டுக்கு செல்ல மார்ச்சரியை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், பிரசவத்திற்கு செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்திலேயே செல்கின்றனர்.

    ஒரு சில பெண்கள் தனியாக அந்த பகுதியை கடந்து செல்ல மிகவும் அச்சப்படுவதாகவும், கொரோனா பரவல் காரணமாக மூடியதாக கூறப்பட்ட பிரசவ வார்டு பாதை தற்போது கொரோனா பரவல் குறைந்த போதிலும் திறக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .
    மேலும் அவசர தேவைக்காக ஒரு சில பெண்கள் சுவர் ஏறி குதித்து வெளியே சென்று தேவையான பொருட்களை வாங்கி வருவதாகவும் கூறுகின்றனர் . இதனால் பிரசவ வார்டுக்கு எளிதாக செல்லும் பாதையை மருத்துவமனை நிர்வாகம் திறக்க வேண்டும் என மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    செய்தியாளர்: சுதர்ஸன் (தேனி)
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி