கம்பம் :\" இது காதலிக்கும் வயசல்ல\" - பள்ளி மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை
பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பள்ளி பருவ காதல் தொடர்பான விழிப்புணர்வுகளை போலீசார் வழங்கினர்.
விழிப்புணர்வு :-
தேனி மாவட்டத்தில் சமீப காலமாக குழந்தை திருமணம், பள்ளி பருவ காதல் , பாலியல் குற்றங்கள் என குழந்தைகள் தொடர்பான பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்சினைகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் தொடர்ந்து வழங்கபட்டு வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கம்பம் பகுதியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர் . இந்த பள்ளியில் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும், குழந்தை திருமணம் தவறு என்பதையும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும், பள்ளிப் பருவக் காதலால் ஏற்படும் சிக்கல்கள், பள்ளி குழந்தைகள் செல்போனில் மூழ்கி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களும் அதன் விளைவுகள் குறித்தும்,
தினசரி மகளிர் காவல் நிலையத்திற்கு வரும் குழந்தைகள் தொடர்பான வழக்குகள் குறித்தும், உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, கம்பம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் நேரு, பள்ளிக் குழந்தைகள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது குறித்தும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் செயல்படுவது குறித்தும் எடுத்துக் கூறினார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.