கம்பம் பகுதியில் தொடா்
மழை பாதிப்பிலிருந்து மீளாத திராட்சை விவசாயம் தற்போது வரை முழுமையாக நடைபெறவில்லை. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் வரத்து குறைவால் திராட்சை கிலோ 200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
திராட்சை சாகுபடி :-
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூா், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திராட்சை சாகுபடி இருந்தாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாகுபடியாகும் திராட்சையை கேரளாவாசிகள் விரும்பி வாங்குவர். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில்
திராட்சை சாகுபடியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பொருளாதார ரீதியாக பயன் அடைந்து வருகின்றனர்.
அழுகிய திராட்சைப் பழங்கள் :-
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் திராட்சை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது.
மேலும், பூச்சித் தாக்குதல், தொடர் மழை காரணமாக திராட்சை அழுகத் தொடங்கியதால் விலை இல்லாமலும் வரத்து இல்லாமலும் மிகவும் அவதிப்பட்டனர் திராட்சை விவசாயிகள்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் குறிப்பாக சுருளிப்பட்டி பகுதியில் ஆண்டுக்கு மூன்று வெள்ளாமை திராட்சை சாகுபடி நடைபெற்று வரும்.
சுருளிப்பட்டி பகுதியில் எப்போது பார்த்தாலும் திராட்சை கொடியில் திராட்சைப் பழங்கள் இருக்கும் நிலையில், மழை பாதிப்பு காரணமாக ஒரு மாத காலமாக சுருளிப்பட்டி பகுதி முழுவதும் திராட்சை விவசாயம் நடைபெறவில்லை.
தற்போது தான் சில இடங்களில் கொடிகள் பதியப்பட்டு திராட்சை சாகுபடி செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முழுமையாக திராட்சை விவசாயம் நடைபெற ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்கின்றனர் விவசாயிகள்
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் திராட்சை வரத்து இல்லாததால் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற திராட்சைப் பழங்கள் 100 ரூபாயை கடந்து மொத்த விலைக்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்திற்கும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்துதான் திராட்சை ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த விலை ஏற்றம் எனக் கூறப்படுகிறது.
மேலும், சுருளிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திராட்சை வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உண்டு என்கின்றனர் வியாபாரிகள்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.