கம்பம் : திமுகவில் முன்னாள் நிர்வாகிகளுக்கு இடம் இல்லையா ? - அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்த முன்னாள் சேர்மன்
தேனி மாவட்டம் சின்னமனூரில் 23வது வார்டில் போட்டியிட இருந்த முன்னாள் சேர்மன் தமிழ் செல்விக்கு, திமுகவில் போட்டியிட இடமளிக்காததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நகர்மன்றத்
தலைவர் :-
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் நகர முன்னாள் சேர்மன், சின்னமனூர் திமுக நகர செயலாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேனி மாவட்டம் சின்னமனூரில் 2006 - 2011 வரை நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார் திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி . திமுகவைச் சேர்ந்த இவர் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சின்னமனூர் பகுதியில் 23 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
திமுகவில் தனக்கு உறுதியாக சீட் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் நகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்கிய தமிழ்ச்செல்விக்கு திமுக-வில் சீட் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால், சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்களுடன் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனை சந்தித்து தனக்கு கவுன்சிலர் சீட் வழங்க கோரி கம்பம் எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் தமிழ்ச்செல்வி .
குற்றச்சாட்டு :-
இதுகுறித்து தமிழ்ச்செல்வி கூறுகையில் , \" சின்னமனூர் பகுதியில் எனக்கு மக்கள் ஆதரவு இருந்தும், எனக்கு சீட் வழங்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .
எனக்கு உறுதியாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், எனது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கி தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டேன். எனக்கு சீட் கிடைக்காமல் இருப்பதற்கு பலர் வேலை பார்த்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளேன். மாவட்ட செயலாளரிடம் நியாயம் கிடைக்கும் வரை முற்றுகை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று கூறினார்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, முற்றுகை போராட்டம் செய்த பெண்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.