கம்பம் நகராட்சியில் முதல் நகர சபை கூட்டம் நகர மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் எளிதாக தங்கள் புகார்களை தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
முதல் நகர்மன்ற கூட்டம் :-
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம், அதன் புதிய தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. துணை தலைவர் சுனோதா செல்வகுமார், ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகளும், நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக மக்களின் கையில் நகர் மன்றம் என்ற பெயரில் குடிநீர் வழங்கல், தெருவிளக்கு, நகர் தூய்மை குறித்து பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே புகார்களை பதிவு செய்திட வாட்ஸ்ஆப் வழி புகார் பதிவு சேவைக்கான எண் 9597 598 599 கொண்ட பலகையை நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் துவக்கி வைத்தார்.
கம்பம் நகரத்தில் உள்ள 33 வார்டுகளிலும் அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக சரி செய்வதற்கு பொதுமக்களுக்கு வாட்ஸ் ஆப் குழு நம்பர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நகராட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம் என்று கூறினார் .
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினராக சுபத்ரா, ஒப்பந்த குழு உறுப்பினராக சர்புதீன், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக அன்புக்குமாரி, வசந்தி, ராஜா, லதா ஆகிய நகர்மன்ற உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொது மக்களின் புகார்களை உடனடியாக தெரிவிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் எண் குறித்து சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.