தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வாக்காளர் ஒருவர் தனது வாக்குப்பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவு விவகாரம் :-
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வமுடன் செலுத்தினர்.
பொதுவாக தேர்தலில் வாக்களித்த நபர்கள் தேர்தலில் தாங்கள் வாக்கு செலுத்தியதை வெளிப்படுத்தும் விதமாக, தங்கள் விரலில் மை இடப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவர்.
வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்குகளை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் போது, வாக்கு செலுத்தும் எந்திரத்தின் படத்தை சமூகவலைதளங்களில் பரப்பக்கூடாது .
இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில், வாக்கு செலுத்தும் போது, வாக்கு செலுத்தும் எந்திரத்தின் புகைப்படத்தை ( வாக்காளரின் வாக்குப்பதிவை ) சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார் ஒரு வாக்காளர்.
இந்த சமூக வலைதள பதிவு வைரலாக பரவத்தொடங்கி, சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்கு பிறகு அந்த சமூக வலைதள பதிவை நீக்கியுள்ளார்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், " வாக்கு பதிவு ரகசியமானது, அதை பதிவு செய்து சமூக வலை தளங்களில் பரப்பியது தேர்தல் ஆணைய விதிகளுக்கு புறம்பானது. இதுபற்றி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யப்படும். வாக்குப்பதிவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.