தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை பைக்கில் வந்த மர்ம நபர் அறுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கிலி பறிப்பு :-
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உத்தமபுரம் எல்.எப். மெயின்ரோடு தெருவைச் சேர்ந்தவர் 70 வயதாகும் ராஜம்மாள். இவர் நியாய விலைக் கடைகளில் வழங்கும் பொருட்களை வாங்க, வீட்டிலிருந்து நியாய விலை கடையை நோக்கி தனியாக சென்றுள்ளார்.
அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ராஜம்மாள் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடிவிட்டார்.
கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்ததையடுத்து ராஜம்மாள் கூச்சலிட்டு உள்ளார். அருகில் உள்ளவர்கள் வந்து சங்கிலி பறித்த நபரை பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதால் அருகில் உள்ளவர்களால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து ராஜம்மாள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மூதாட்டியின் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.