சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுகவின் இரு நிர்வாகிகள் இடையே பலத்த போட்டி நிலவியநிலையில், மறைமுக தேர்தலின் முடிவில் திமுகவைச் சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் அய்யம்மாள் நகர்மன்றத் தலைவராக தேர்வு பெற்றார்.
சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவி :-
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 20 வார்டில் திமுக கூட்டணியும்,6 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது.
இதில் 25வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற அய்யம்மாள் என்பவரை திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அக்கட்சி தலைமை போட்டியிட அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலானது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
திமுகவைச் சேர்ந்த 19வது வார்டு உறுப்பினரான செண்பகம் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட அய்யம்மாளுக்கு எதிராக போட்டியிட்டார்.
முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட 25வது வார்டு உறுப்பினரான அய்யம்மாள் மொத்தமுள்ள 27 ஓட்டுக்களில் 16 ஓட்டுக்கள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்வானார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார். நகர்மன்ற தலைவராக தேர்வான அய்யம்மாளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.