பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் திருக்கோவிலில் உள்ள முருகப் பெருமான்ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டிற்குப் பின்னர் மீண்டும் சன்னதிக்கு வந்தடைந்தார்.
பங்குனி உத்திரம் :-
தமிழகத்தில் பங்குனி உத்திர நாளில் தமிழ் கடவுளான முருகன் கோவிலில் சிறப்பு பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதமும் நட்சத்திரத்தின் கடைசி நட்சத்திரமான உத்திரமும் இணைந்து வருவதுதான் பங்குனி உத்திரம் எனப்படுகிறது.
அனைத்து மாதங்களிலும் உத்திர நட்சத்திரம் தோன்றினாலும் பங்குனி மாதத்தில் தோன்றும் உத்திர நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். இதனால் பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டவும் முருகப்பெருமானுக்கு நடக்கும் அபிஷேகங்களை காணவும் பொதுமக்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
தேனி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் உடனுறை திருக்கோயிலில் உள்ள முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பங்குனி உத்திரம் திருநாளில் மயில் வாகனத்தில் பாரம்பரிய வழக்கப்படி கீழ பூலானந்தபுரம் கிராம மக்களால் சின்னமனூர் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்று சன்னதிக்கு முருகப்பெருமானை மறுநாள் அழைத்து வருவது வழக்கம்.
அதன்படி, இந்த வருடமும் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் இணைந்து சின்னமனூர் நகரம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர் முழுவதும் ஊர்வலம் வந்த முருகன் மறுநாள் சன்னதியை வந்தடைந்தார்.
முருகப்பெருமானை ஊர்வலமாக அழைத்துச் செல்லும்போது பறை இசை, தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது கூடுதல் சிறப்பாகும். ஊர்வலமாக சென்று திரும்பிய முருகப் பெருமானை வழிபட ஏராளமான மக்கள் வருகை புரிந்தனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.