சின்னமனூர் நகராட்சியில் வெற்றி பெற்ற
திமுக கவுன்சிலர்களை தன்வசபடுத்துவதில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னமனூர் நகராட்சி :-
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஒரு வார்டில் மட்டும் போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 26 வார்டுகளில் நடைபெற்ற வாக்குப்பதிவின் வாக்குகள் எண்ணும் பணி சின்னமனூர் காயத்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றின் போது 1 முதல் 7 வரையிலான வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 7 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
அதன்படி, திமுக 5 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக வாக்கு எண்ணும் மையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தயார் நிலையில் இருந்த திமுகவைச் சேர்ந்த இரு பிரிவினர் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில், வெற்றி பெற்ற கவுன்சிலர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் திமுகவினரை தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.
சின்னமனூர் நகராட்சியின் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக கூட்டணி 17 இடங்களிலும், அதிமுக ஆறு இடங்களிலும், மதிமுக, பிஜேபி, சிபிஐ, இ.தே.க ஆகிய கட்சிகள் தலா ஒரு இடம் வெற்றி பெற்றுள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.