சின்னமனூர் நகர்மன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கவுன்சிலர்களைகட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக தலைமை.
சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவி :-
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இந்த 27 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 20 வார்டில் திமுக கூட்டணியும்,6 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது.
சின்னமனூர் நகராட்சியில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்று இருந்ததால் நகர்மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ஐந்து நபர்கள் போட்டியிட்டனர் .
இந்த நிலையில் திமுக தலைமையின் பேச்சுவார்த்தையின் முடிவில், சின்னமனூர் நகர்மன்ற தலைவருக்கான வேட்பாளராக 25வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற அய்யம்மாள் என்பவரை போட்டியிட அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்தது. தலைமை அறிவித்த திமுக வேட்பாளரை எதிர்த்து , திமுகவைச் சேர்ந்த 19வது வார்டு உறுப்பினர் செண்பகம் போட்டியிட்டார் .
இருவர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடைபெற்றது . தேர்தல் முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட 25வது வார்டு உறுப்பினரான அய்யம்மாள் மொத்தமுள்ள 27 ஓட்டுக்களில் 16 ஓட்டுக்கள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார்.

அதிமுக அறிக்கை
அதிமுகவினர் நீக்கம் :-
இந்தநிலையில் திமுகவைச் சேர்ந்த இரு வேட்பாளர்களுக்கு, அதிமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை 6 அதிமுக வேட்பாளர்களையும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.
நீக்கப்பட்டவர்கள் விவரம்:
10வதுவார்டுஉறுப்பினர் ஜெகதீசன்,
13வது வார்டு உறுப்பினர் உமாராணி,
14வது வார்டு உறுப்பினர் கவிதா ராணி,
18-வது வார்டு உறுப்பினர் பிச்சை கணபதி ,
22வது வார்டு உறுப்பினர் செல்வி,
26 வது வார்டு உறுப்பினர் தவசி,
ஆகிய 6 கவுன்சிலர்களையும்சின்னமனூர் அதிமுக நகர கழக செயலாளரான ராஜேந்திரனையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியில் இருந்தும் நீக்குவதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் இவர்களிடம் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தலைமை அறிவித்துள்ளது. இதனால் சின்னமனூர் நகர அதிமுக நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.