பல இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட சின்னமனூர் பேருந்து நிலையத்தை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறக்கணிப்பதால், பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சின்னமனூர் பேருந்து நிலையம் :-
தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பேருந்துகள் புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது. தேனி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பயன்பாடில்லாமல் இருந்த நேதாஜி பேருந்து நிலையத்தை பல இலட்சம் மதிப்பில் புனரமைத்தது சின்னமனூர் நகராட்சி. இந்த பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம், அம்மா உணவகம், பயணியர் நிழர்குடை என பல வசதிகள் உள்ளது.
இந்த பேருந்து நிலையமானது,ஒரே நேரத்தில் நற்பது முதல் ஐம்பது பேருந்துகள் வரை நிறுத்தக்கூடிய வசதி கொண்டது.
ஆனாலும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராதக் காரணத்தினால் மக்கள் அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.
சமீபகாலமாக, சின்னமனூர் நகராட்சி மற்றும் காவல் துறையினர் இணைந்து அனைத்து பேருந்துகளும் சின்னமனூர் பேருந்து நிலையத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகையை வைத்தனர்.
இந்த அறிவிப்பு பெயரளவில் மட்டுமே இருந்ததால் அடுத்தடுத்த நாட்களில் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு செல்வதை தவிர்த்து நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு சென்றது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பும் அவ்வப்போது ஏற்படுகிறது.
புறக்கணிக்கும் பேருந்துகள் :-
சின்னமனூர் பேருந்து நிலையத்தை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது. பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராததால், மக்களும் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்று பேருந்து ஏறிச் செல்கின்றனர். இதனால் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையம் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன. ஆனால், வியாபாரிகள் அதணை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் அதனை தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.
சின்னமனூர் பேருந்து நிலையத்தில் சில நகரப் பேருந்துகள் தவிர அனைத்துப் பேருந்துகளும் பயன்படுத்தாத காரணத்தினால், மேகமலை மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் எந்த நேரத்தில் வருகிறது என்ற தகவல் தெரியவில்லை என்று புலம்புகின்றனர் பேருந்து பயணிகள்.
இதனால் நகராட்சி பணியாளர்கள் பெயரளவில் செயல்படாமல் பேருந்துகள் நிரந்தரமாக, பேருந்து நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.