Home /local-news /

தேனி மாவட்ட இன்றைய (7/5/22) செய்திகள் மற்றும் நிகழ்வுகள்!

தேனி மாவட்ட இன்றைய (7/5/22) செய்திகள் மற்றும் நிகழ்வுகள்!

Theni news

Theni news

தேனி மாவட்டத்தில் 07.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  எம்எல்ஏ அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி - மலர் கண்காட்சி நாளை நிறைவு : இன்றைய தேனி மாவட்ட செய்திகள் (7/5/22)

  மலர் கண்காட்சி நாளை நிறைவு :-

  தமிழக பகுதியில் இருந்து கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சியை நடைபெறாத நிலையில் இந்தாண்டு நடைபெறுவதற்கான அனுமதியே கேரள அரசு வழங்கியது

  இதனையடுத்து தேக்கடி 14 வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில், ஏப்ரல் 1 ம் தொடங்கி மே மாதம் 2 ம் தேதி வரை மொத்தம் 32 நாட்கள் நடைபெற இருந்தது. தற்போது மலர் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணியின் கோரிக்கைக்கு ஏற்ப மலர் கண்காட்சி மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

  தேக்கடி பகுதியில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை காண தமிழக மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு மலர் கண்காட்சி தொடங்கிய 20 நாட்களிலேயே ஒரு லட்சம் பார்வையாளர்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு களித்து சென்றுள்ளனர்.

  மேலும் டிக்கெட் இல்லாமல் ஆதரவற்ற முதியோர்கள் ஆதரவற்ற குழந்தைகள் என பலரும் இலவசமாக இந்த மலர் கண்காட்சியை கண்டு களித்து சென்றுள்ளனர். மே 8ம் தேதி வரை நடைபெற உள்ள மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது.

  தீக்குளிக்க முயற்சி :-

  தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகம் முன்பு தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் பணம் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு பதவி வழங்கி விட்டதாக குற்றம் சாட்டி தனக்கு எந்த பதவியும் வழங்கவில்லை எனக் கூறி கம்பம்மெட்டு ரோடு காலணி ஒன்பதாவது வார்ட்டை சேர்ந்த முன்னாள் திமுக வார்டு செயலாளரான ஷாஜகான் தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அங்கு இருந்த போலீசார் சுதாகரித்துக் கொண்டு மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிபோலீசார் உடனடியாக இழுத்துச் சென்று தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர்.

  திமுக முன்னாள் வார்டு செயலாளர் தீக்குளிக்க வந்த சம்பவம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


  போக்குவரத்து மாற்றம் :-

  தேனி மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழான வீரபாண்டி திருவிழா மே 10ஆம் தேதி முதல் தொடங்கி 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவிழா நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தேனியிலிருந்து உத்தமபாளையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உப்புக்கோட்டை விலக்கு முன்பு திருப்பப்பட்டு மாற்று வழியாக குச்சனூர், மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் (அ) உத்தமபாளையம் சென்றடையவும்,

  அதே போன்று சின்னமனூரில் இருந்து தேனி மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உப்பார்பட்டி விலக்கு முன்பு திருப்பப்பட்டு மாற்று வழியாக தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் வழியாக தேனி சென்றடையவும் காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  மாற்று வழித்தடங்கள் 10.05.22 காலை 06.00 மணி முதல் 17.05.22 நள்ளிரவு வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறும் தேனி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

  உண்ணாவிரத போராட்டம் :-

  தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் 1296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாநகருக்கு தண்ணீர் கொண்டு செல்ல கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை பொதுப் பணித்துறையினர் கடந்த சில தினங்களாக கூடலூர் குருவனூத்து பகுதியில் உள்ள சலவைத் தொழிலாளர் கூடம் அருகே திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திட்டப்பணியை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சலவை தொழிலாளர்கள், விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை செய்தனர்.

  இதனை தொடர்ந்து தொடர் போராட்டமாக இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருக்கும் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள்.

  இந்த போராட்டத்தில் சலவைத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

  மேலும் தொடர்ந்து இத்திட்டத்தை அரசு கைவிட தவறினால், எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கடை போன்றவற்றை அரசிடமே ஒப்படைத்து நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறுவதாக கூறி உள்ளனர்.

  நேர்த்திக் கடனுக்கு நேரம் ஒதுக்கீடு :-

  தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. மிகவும் புகழ்பெற்ற இத்திருவிழாவில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி கௌமாரி அம்மனை வழிபடுவர். அந்தவகையில் அம்மனுக்கு தீச்சட்டி கரகம் முளைப்பாரி அக்னி குழி இறங்குதல், காவடி எடுத்தல் உருண்டு கொடுத்தல் போன்ற பல்வேறு வகைகளில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

  தற்போது கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுவதால் உருண்டை கொடுக்கும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருண்டு கொடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் உருண்டு செலுத்தும் நேர்த்திக் கடனை அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள் செய்திட கிராம கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.

  சீரமைப்பு பணிகள் தீவிரம் :-

  தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கூடலூர் கேகே பட்டி கேஜி பெட்டி கோம்பை பண்ணைப்புரம் போன்ற பல பகுதி மக்களுக்கு லோயர் கேம்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

  லோயர் கேம்பில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது . இங்கு முல்லைப்பெரியாறு தண்ணீரை லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பம்ப் செய்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

  லோயர் கேம்ப் அருகே உள்ள பெரியார் மின்நிலைய பழைய பாலத்தின் வழியாக குடிநீர் செல்லும் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் மின்நிலைய கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலை புதிய பாலம் அமைக்கப்பட்ட பின் பழைய பாலம் பயனற்று இருந்ததால் அதற்கு மேலாக குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

  தற்போது முல்லை பெரியாற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் பொதுப்பணித் துறை சார்பாக பெரியாறு மின் நிலையம் பாலத்தின் அடியில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது.பழைய பாலம் மற்றும் மண்ணரிப்பு மரத்தின் வேர் பாலத்தின் இடையே சென்றதால் பாலம் பலமிழந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி சரியத் தொடங்கியது.

  பிற்பகல் வேளையில் பொதுப்பணித்துறை மற்றும் இதர பணியாளர்கள் வேலை முடித்து சென்ற பிறகு இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் உயிர் சேதமும் ஏற்படவில்லை. பாலம் உடைந்ததில் லோயர் கேம்பில் இருந்து பம்ப் செய்து கோம்பை பண்ணைப்புரம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் குழாய் உடைந்தது. மேலும் தொலைத்தொடர்பு கேபிள்களும் அருந்தது.

  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் மற்றும் கம்பம் நகராட்சி அலுவலர்கள் குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்ட வந்த தண்ணீரை நிறுத்தி மேலும் பாலம் முடியாமல் தடுத்தனர். தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பில்லர் வைப்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை இந்த பணிகளை செய்து வருகின்றனர். துறந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முழுமையான பணிகள் முடிய ஓரிரு நாட்களுக்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது . இந்த பணிகள் முடிவடைந்த பின்பு உடைந்த குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மீண்டும் பதிவேற்றம் அவசியம் :-

  எஸ்.ஐ.காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள்மீண்டும். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூறப்பட்டுள்ளது. தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்யுமாறு, தமிழக அரசின் தேர்வாணையம் இமெயில் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

  இந்த இ-மெயில், விண்ணப்பித்தவர்களின் இமெயில் முகவரிக்கு சென்றுள்ளது. இந்த இமெயில் விபரம் வராதவர்கள் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுதல் மிகவும் நன்மை எனவும், தங்களது நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 15-05-2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர் : சுதர்ஸன்
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி