ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் இருந்து இறந்தவரின் உடலை எரிக்க முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் வரை செய்திகளை காண்போம்.
இருபாலர் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்றிய உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பரமக்குடி பொன்னையாபுரம் அரசு கலைக்கல்லூரி இருபாலர் அரசு கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கல்லூரியில் 680 மாணவர்கள், 400 மாணவிகள் என 1080 பேர் படித்து வருகின்றனர். இக்கல்லூரியை மகளிர் கல்லூரியாக தமிழக அரசு மாற்றி அறிவித்துள்ளது.
இதனால் 50 கிலோ மீட்டர் வரை ராமநாதபுரத்தில் அல்லது கடலாடியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் பயில நேரிடும். இதனை கண்டித்து போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
மாதம் ஓய்வூதியம் ரூ.16,000 கோரி கலெக்டர் அலுவலகத்தை கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை.!
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் சில முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.
34 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கல்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 13 பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய 10 தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை 34 மாற்றுத்திறனாளிகளுக்கு 13 லட்சத்து 82 ஆயிரத்து 366 ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்.
இறந்தவரின் உடலை எடுக்க முடியாததால் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான அல்லிக்கண்மாய் எரிவாயு தகனமேடை நீண்ட நாட்களாக பழுதடைந்து உள்ளது. தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்ட தான் நீண்ட நாட்கள் பயன்படாமல் இருந்துள்ளது.
இதையடுத்து இறந்தவரின் உடலை எரிக்க விறகும் இல்லாமல் எரிக்க முடியாமலும் நான்கு மணிநேரத்திற்கும் மேல் இருந்த காரணத்தினால் அல்லிக்கண்மாய் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள புள்ளிகளை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் கணேசன் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெயிண்டர் கணேசன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விவசாயம் செழிக்க அக்னி சட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலம்
முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில் உள்ள வாழவந்த அம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி விவசாயம் செழித்து, பருவமழை பெய்யவேண்டி பெண்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வங்கி ஊழியர் போன்று பேசி நூதன முறையில் மோசடி போலிஸார் விசாரணை
கமுதி அருகே காத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தூரான் மகன் செல்வக்குமார் (35). வங்கி ஊழியர் போல பேசி எனிடெஸ்க் எனப்படும் செயலியை பதிவிறக்க கூறிஇவரிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கி ஊழியர் போல பேசி தனது கணக்கில் இருந்து பணம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தினை மீட்டு தருமாறு சைபர்கிரைம் காவல்துறையினரிடம் செல்வக்குமார் புகார் செய்தார்
பச்சிளம் குழந்தையை கடத்த முயன்ற நபர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்
நயினார் கோவில் அடுத்த அகரம் பகுதியில் செல்வம் (35) இவரது மனைவி சிவரஞ்சனி, 62 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை வீட்டிற்குள் புகுந்து கடத்த முயன்றவரை யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானிலை அறிக்கை
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
காற்றின் வேகம்: 20முதல் 43 கிமீ/ம வரை
காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது
இன்றைய (14.04.2022) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் உள்ளது. ராமநாதபுரத்தில் மட்டும் பெட்ரோல் பைசா விலை மட்டும் உயர்ந்துள்ளது. மற்ற பகுதிகளில் அதே விலை தான் நீடிக்கிறது
ராமநாதபுரம்
பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.