ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவாக அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20,000 மதிப்பிலான 13 மின் விசிறிகளை ஜெகன் சுரேஷ் நினைவு அறக்கட்டளை சார்பாக நன்கொடையாக வழங்கப்பட்டது
திருப்புல்லாணி ஒன்றியத்தின் முன்னாள் பெருந்தலைவர் ஜெகநாதபிள்ளை அவரது மகன் குடும்பத்தாரின் நினைவாக, ரூ.10 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைகளை கட்டி இப்பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதனால் 1999-ல் அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளியின் பெயரை சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளி என தமிழக அரசு பெயர் மாற்றம் செய்தது.
அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். 2006-ல் இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது 424 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வு மையமாக உள்ளது. பள்ளியின் பல வகுப்பறைகளில் மின்வசதியும், மின் விசிறியும் இல்லாமல் இருந்தது.
மேலும் இந்தாண்டு வெயில் காலத்தில் அரசு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதியுறுவார்கள் என்பதை அறிந்து ராமநாதபுரம் ஜெகன் சுரேஷ் நினைவு அறக்கட்டளையினர் பள்ளிக்கு ரூ.20,000 மதிப்பிலான 13 மின் விசிறிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதை பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜ், உதவித் தலைமை ஆசிரியர் சண்முகநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மின் விசிறிகளை நன்கொடையாக வழங்கிய ராமநாதபுரம் ஜெகன் சுரேஷ் நினைவு அறக்கட்டளையினருக்கு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.