ராமநாதபுரம் அருகே திரு உத்தரகோசமங்கையில் 100 ஆண்டுகளுக்கு பின் அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் உத்தரகோசமங்கையில் உலகப் புகழ்பெற்ற சிவன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோவில் மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் சுவாமிகள் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்கள்.
திருக்கோயில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய திருக்கோவில் என்பதால் திருக்கோவிலை ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இங்கு அமைந்துள்ள மரகத கல்லால் ஆன நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனம் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் மரகத நடராஜர் மீது வருடம் ஒருமுறை பூசப்பட்டு வரும் சந்தனம் , காப்பு சாத்துதல் போன்ற நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றதாகும்.
இதனால் இத் திருக்கோயில் பல்வேறு நாடு மற்றும் வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்திருக்கோவிலில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதாகும்.
இத்திருக்கோவில் உள்ள தேரை பாரம்பரிய முறைப்படி தூண்கள், மேற்கூறை அமைத்தல் சேதமடைந்த தூண்களை மராமத்து பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் மீண்டும் தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு உபயதாரர்கள் உதவியுடன் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வந்து தேர் புதுப்பிக்கபட்டது.
இந்நிலையில், சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றதையடுத்து, புதிய தேர் வண்ன மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மங்களேஸ்வரி மங்களநாதர் உற்சவ மூர்த்திகளை வைத்து நான்கு ரத வீதிகளிலும் தேர் பவனி வந்தது.
இதையடுத்து, 100 ஆண்டுகளுக்கு பின் தேர் பவனி வரும் நிகழ்ச்சி அடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கண்டுகளித்து சுவாமி தரிசனம் பெற்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.