ராமநாதபுரத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பாக பணியாற்றிய 59 காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மயில்வாகனன், ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக், சிவகங்கை எஸ் பி செந்தில்குமார் மற்றும் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் சமூக விரோதிகளின் செயல்பாடுகள் அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விபத்துகளை குறைப்பது சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது போன்றவை தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாத காலங்களில் குற்ற வழக்குகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.
டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறியதாவது:-
தமிழகத்தில் ரவுடிகளின் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து ரவுடிகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர்களை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே காஞ்சிபுரம் மற்றும் வேலூர் காவல் சரகங்களில் இது போன்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது தற்போது ராமநாதபுரத்தில் இந்த ஆய்வு நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை கடலோரப் பகுதிகள் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம் என்று கூறினார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.