ராமேஸ்வரம்: வனத்துறையினர் சார்பில் பாம்பனில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருசடை தீவிற்கு 12 நபர்கள் வரை செல்லும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் டால்பின், ஆமை, கடல்குதிரை, கடல் பசு, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
மண்டபம் சரகத்திற்கு உட்பட்ட பாம்பன் குந்துகால் அருகே உள்ள கடல் பகுதியில் குருசடை தீவு மற்றும் சிங்கலிதீவு உள்ளன. இதில் குருசடை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் பல வண்ணங்களில் கடலுக்குள் அதிக அளவில் பவளப்பாறைகள் உள்ளது.
இவற்றை கானும் வகையில், சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறையின் மூலம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடைதீவு வரையிலும் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Kurusadai Island Boating
இதற்காக குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தில் மரத்தாலான படகு நிறுத்தும் தளம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு 12 பேர் அமர்ந்து பயணம் செய்ய பைபர் படகு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படகில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.400 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு நபருக்கு கட்டணத் தொகை அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரியில் ஆர்வம் காட்டவில்லை.
பெட்ரோல் விலை அதிகரிப்பு மற்றும் இந்த வகை படகிருக்கு அதிகப்படியான பெட்ரோல் பயன்படுவதால், இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று வனத்துறை சார்பில் தெரிவித்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.