சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமும், எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பை கடலில் போடும் போராட்டம் நடைபெற்றது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏழை எளிய சாமானிய பொதுமக்கள் மிகவும் அவதியுற்று பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தவும், விலைவாசியை குறைத்து, சாமானிய பொதுமக்களின் நலனை காத்திட வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. கீழ ரதவீதியில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புகளை தூக்கிக் கொண்டு ஏராளமான ஆண்கள் பெண்கள் கைக்குழந்தையுடன் ஊர்வலமாக வந்தனர்.
இதையடுத்து, அக்னி தீர்த்த கடற்கரையில் எரிவாயு மற்றும் அடுப்புக்கு பூ மாலை அணிவித்து மத்திய அரசுக்கு தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், கண்டன முழக்கம் எழுப்பப்பட்டன.
அதனை தொடர்ந்து சமையல் எரிவாயு மற்றும் அடுப்பை கடலில் தூக்கி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வால் எரிவாயு சிலிண்டர் அடுப்பிலிருந்து பழைய முறைப்படியான விறகு அடுப்பிற்கு மாறும் நிலைமையில் இருப்பதாக இல்லத்தரசிகள் கூறினர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.