மண்டபத்தில் கடல் சீற்றத்தால் விசைப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு விசைப்படகு கடலில் மூழ்கியது. மூழ்கிய படகுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தல்.
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 3 தினங்களுக்கு மேலாக மண்டபம் கடல் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
மேலும், பாம்பன் புயல் எச்சரிக்கை நிலையத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குஞ்சாரவலசை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடல் சீற்றத்தின் காரணமாக படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விசைப்படகு கடலில் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்தது.
இதனால் ஒரு விசைப்படகு வாங்குவதற்கு 50 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்பதால் தற்போது கடலில் மூழ்கிய படகை மீட்கப்பட்டாலும் சீரமைக்க முடியாது என்பதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இதுபோன்று தொடர்ச்சியாக கடல் சீற்றத்தினால் விசை படகுகள் சேதம் அடைந்து வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க மத்திய, மாநில அரசுகள் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேதமடைந்த விசைப்படகிற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் பூ மனோஜ்குமார் ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.