ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து அரசின் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடந்த புதன்கிழமையன்று காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், அதேபோல மண்டபம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் என 16 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். 2 மீன்பிடி விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் மீதான இந்த கைது நடவடிக்கையை கண்டித்து இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கோவில்வாடி மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் கோவில்வாடி பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது.
இந்த சூழலில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை:-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் 2 விசைப்படகையும் விடுதலை செய்ய வேண்டும், கடந்த டிசம்பர் மாதத்தில் பிடிபட்ட 18 விசைப்படகை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல ஏற்கனவே பிடிபட்டு இலங்கை வசம் நல்ல நிலையில் இருக்கும் ஏலம் விடப்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை திரும்பப் பெற்று மீண்டும் படகு உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் முட்டி மோதி கடலில் மூழ்கிய படகிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தங்களது கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 1200-க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை மற்றும் வருவாயை இழந்து வருகின்றனர்.
உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீனவரின் மீது அக்கறை கொண்டு உடனடியாக அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.