ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரையில், மண்டபம் வனத்துறையினரால் கண்டறியப்பட்டு, முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட ஆமை முட்டைகளில், 52 நாட்களுக்குப்பிறகு குஞ்சு பொரித்து வெளிவந்த 153 ஆமை குஞ்சுகள் இன்று பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
உலகில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், அபூர்வ வகையான கடல் தாவரங்கள் அதிகமாக வசிப்பதால் மன்னார் வளைகுடா கடல் பகுதி, உயிர்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இக்கடல் பகுதியில் வாழ்ந்துவரும் ஆமைகள் கடற்கரைக்கு வந்து பாதுகாப்பான இடத்தைத்தேர்வு செய்து அங்கு குழிதோண்டி அதில் முட்டையிட்டு அவற்றை பாதுகாக்கின்றன.
இந்த முட்டைகளை சிலர் எடுத்து அழித்து விடுவதால் ஆமைகள் இனப்பெருக்கம் குறைய தொடங்கியது. இதனைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
மேலும் ஆண்டுதோறும் ஆமை முட்டை இடும் இடங்களை கண்டுபிடித்து அவற்றை சேகரித்து முகுந்தராயர் சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து குஞ்சு பொரித்ததும் அவற்றை கடலில்விடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் வனத்துறையினர். இந்த வகையில் இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிடும் சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.
ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள தனுஷ்கோடி கடற்கரையில் 153 ஆமை முட்டைகள் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
அவ்வாறு ஐந்து குழிகளில் பாதுகாக்கப்பட்ட 153 முட்டைகள் 52 நாட்களுக்குப்பிறகு குஞ்சு பொரித்து 153 குஞ்சுகள் வெளிவந்தன.
இந்த குஞ்சுகளை ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின பாதுகாப்பாளர் மாரிமுத்து தலைமையில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் இன்று பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
ஆமை குஞ்சுகள் தத்தித்தத்தி நடந்து கடலுக்குள் சென்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது. பின்பு அங்குவந்த பள்ளி மாணவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கூறி, பின்பு கடல் வளம் காக்க பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று மஞ்சள் பைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.