தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் கொண்டு வரப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற இரு தலைமணியன் பாம்பு மற்றும் ஆறு பச்சைக் கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள்.
ராமநாதபுரம் வன உயிரின பாதுகாப்பு படையினர் ரயில் நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே வனவர் சடையாண்டி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்க்கையில், இருவரும் அவர்களை பார்த்தவுடன் பிளாஸ்டிக் வாளி மற்றும் கையில் சாக்கு பையை வைத்து கொண்டு தப்பித்து ஓட முயற்சித்துள்ளனர்.
அப்போது அவர்களை வனத்துறை பாதுகாப்பு படையினர் விரட்டிப் பிடித்து, அவர்களை சோதனை செய்து பார்த்ததில் பிளாஸ்டிக் வாளியில் மண்ணுளிப் பாம்பு என்று அழைக்கப்படும் இருதலை மணியன் பாம்பும், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ரோஸ் நிற வளைய ஆறு பச்சைக்கிளிகள் இருந்துள்ளது.
இதையடுத்து, வனப் பாதுகாப்பு படையினர் அவர்களை பிடித்து, உதவி வன பாதுகாவலரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த ராபர்ட் ஷஜி என்றும், தூத்துக்குடி மாவட்டம் வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த முத்து தங்கம் என்று தெரியவந்தது. சென்னைக்கு விற்பதற்காக கொண்டு செல்லப்பட்டது என்று தெரியவந்தது.
இவ்வழக்கு மேல் நடவடிக்கைக்காக ராமநாதபுரம் வன உயிரின வனச்சரக அலுவலகர் ஜெபேஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், குற்றவாளிகள் இருவருக்கும் இணக்கட்டணம் விதிக்கப்பட்டு, பிடி பொருளான இருதலை மணியன் பாம்பு மற்றும் ரோஸ் நிற வளைய ஆறு கிளிகளும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி வனப்பகுதியில் விடப்பட்டன.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.