ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் ஏர்வாடி தர்கா அருகே உள்ள சடைமுனியன் வலசையில் கிராம மக்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
மீன்பிடித் தொழில் அமோகமாக நடைபெற வருடாவருடம் கடலை ஒரு தாயாக பாவித்து, கடல் மக்கத்து அம்மாளாக வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், சடைமுனியன் வலசை கிராமத்து மக்கள் அனைவரும் கடல் அருகே திரண்டனர். அங்கு, கடல் அருகே கொடிமரத்தில் கிராமத் தலைவர் மலைராஜ் பச்சைக்கொடி ஏற்றி வைத்தார். இதையொட்டி மவுலிது ஓதப்பட்டு, கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கலிட்டு நெய்சோறு படைக்கப்பட்டது.
இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது, “எங்களது முன்னோர்கள் காலங்காலமாக கடல் மக்கத்து அம்மாளுக்கு ஆண்டுதோறும் பொங்கலிட்டு நெய் சோறு வழங்கி, அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுகூடி கடல் அருகே கொடிமரத்தில் கொடி ஏற்றி வழிபட்டனர்.இவ்வாறு செய்தால் மீன்பிடி தொழில் மிக அமோகமாக இருந்ததாக முன்னோர்கள் தெரிவித்தனர். கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதை யாரும் பின்பற்றவில்லை.
இதனால், மீன்பிடி தொழில் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், ஆண்டுதோறும் இதுபோன்ற சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டது. தற்போது, கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கல் வழிபாடு செய்து உள்ளோம்” என்றார்கள்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.