இலங்கையைச் சேர்ந்த கணவன், மனைவி தங்களின் 10 வயது மகள் மற்றும் இரண்டு வயது கைக்குழந்தையுடன் இன்று காலையில் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில் கம்பிபாடு பகுதியில் அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விலைவாசி விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் நாள்தோறும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக ஏற்கனவே இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்கள் வந்துள்ளனர்.
இதையடுத்து, இலங்கை கடற்படையின் அதிதீவிர ரோந்து காரணமாகவும், இந்திய கடலோர காவல்படையின் ரோந்து பணியில் காரணமாகவும் அகதிகளின் வருகை தடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு கடல் பகுதியில் இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மரைன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அந்தோணி நிஷாந்த் பெர்னடோ(34),ரஞ்சிதா(29) , ஜெனுஸ்ரீகா(10), ஆகாஷ்(2) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தலைமன்னார் வந்து அங்கிருந்து பைபர் படகில் தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2006-ம் ஆண்டில் உள்நாட்டு போரின் காரணமாக தனுஷ்கோடி வந்தபோது மண்டபம் முகாமில் இருந்தனர். பின்பு 2010–ல் இலங்கைக்கு திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.