படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை நடத்துனர் உள்ளே வரச் சொன்னதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப் பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது. தினசரி கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக ஏராளமானோர் பரமக்குடி வந்து செல்கின்றனர்.
பரமக்குடி பணிமனையில் இருந்து 30 டவுன் பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன. பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து கமுதக்குடி கிராமத்திற்கு இன்று மாலை வழக்கம்போல் டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது.
படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தொங்கியதால் நடத்துநர் திருப்பதி மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து மாணவர்கள் பேருந்தின் பக்கவாட்டில் கையால் அடித்து சத்தத்தை எழுப்பி உள்ளனர். மேலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மூவர் காட்டுபரமக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபின் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்தில் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.