ராமநாதபுரம் சமஸ்தான பரம்பரை தர்மகர்த்தாவான ராணி சேதுபதி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு பாத்தியமானது, புல்லாணி திருப்பதி எனப்படும் திருப்புல்லாணியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெகநாத பெருமாள் ஆலயம். இங்கே பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் ஆலய பங்குனி தேரோட்டம் கடந்த வெள்ளியன்று காலை 9.00 மணியளவில் புறப்பட்டு நான்கு திசைகளிலும் வலம் வந்தது. இதையடுத்து, சரியாக அன்று காலை 11.30 மணியளவில் திருத்தேரானது கோவிலின் வாசலுக்கு வந்தடைந்தது. அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரசாதமாக வாழைப்பழம் மற்றும் பூஜை செய்யப்பட்ட பூக்கள் வழங்கப்பட்டது.
இது இக்கோயிலில் நடைபெறும் 1,431 ஆம் வருட தேரோட்டம் ஆகும். இந்தத் திருத்தலமானது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலின் வரலாறு :-
இந்த புனிதத்தலமானது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது. ராமனின் தகப்பனான தசரதன் குழந்தை வரம் கேட்டு வந்ததாகவும், இங்கு புத்திர காமேஷ்டி யாகம் நடத்தியதாகவும், இந்த யாகத்தின் போது தேவதூதர் அளித்த பாயாசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பலனாக தான் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் பிறந்ததாக ஐதீகம்.
குழந்தை வரம் கேட்ட தசரதர் இரவு பொழுதானதால் கோவிலில் தங்கியிருந்ததாகவும், அந்த இடத்தில் தலையனை தேவைப்பட்டதால் அருகம்புல்லினை எடுத்து தலைக்கு தலையனை வைத்து உறங்கியதால் திருப்புல்லனை என்றிருந்த ஊரானது திருப்புல்லாணி என மருவி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், குழந்தைப் பாக்கியம் இல்லாத பக்தர்கள் சேதுக்கரையில் நீராடி பின்பு, ஜெகநாதர் கோவிலில் உள்ள நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கவேண்டும். அடுத்தநாள் காலையில் நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.