ராமேஸ்வரம் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக போட்டியின்றி திமுகவை சேர்ந்த நாசர்கான் தேர்வு செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் நகராட்சியின் மொத்தம் உள்ள 21 வார்டுகளுள்,12 வார்டுகளில் திமுக கூட்டணியும், 6 வார்டுகளில் அதிமுக கூட்டணியும் , மீதமுள்ள மூன்று இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலேயே 3 சுயேட்சை வேட்பாளர்களும் திமுகவில் தஞ்சமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களில், அதிமுகவின் 3 உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து திமுகவின் பலம் 12-ல் இருந்து 18 ஆக உயர்ந்தது, இதனை அடுத்து ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்தவரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அனைவருக்கும் தெரியவந்தது.
நேற்று, திமுக தலைமையிலிருந்து ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக நாசர்கான் அறிவிக்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது
இந்த வாக்கெடுப்பின் போது நாசர்கானை தவிர வேறு எந்த ஒரு வேட்பாளரும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடாத காரணத்தினால் நாசர்கான் ஒருமனதாக நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நாசர்கான் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டு நகர்மன்ற தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 10 வருடங்களுக்கு பிறகு ராமேஸ்வரம் நகராட்சியை கைப்பற்றியதால் திமுகவினர் ஆரவாரமாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.