திருவிழா செலவிற்காக தாயிடம் பணம் கேட்ட நிலையில், அவர் பணம் தர மறுத்ததால் பெற்ற தாயையே கொலை செய்த வழக்கில் குற்றவாளியான மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (60). இவர் தன் குடும்பத்துடன் மதுரை காமராஜபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதியன்று ஊர் திருவிழாவிற்காக காளிமுத்து தனது சொந்த ஊரான காணிக்கூரிற்கு தன் குடும்பத்துடன் வந்துள்ளார்.
இந்நிலையில், மார்ச் 9-ம் தேதி அன்று காலை காளிமுத்துவின் மகன் குருசாமி (39) திருவிழா செலவிற்கு தனது தாயார் முத்துப்பேச்சியிடம் பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, தாயார் முத்துப்பேச்சி பணம் தர மறுக்கவே, அதற்கு குருசாமி அருகில் இருந்த அரிவாளை எடுத்து முத்துப்பேச்சியை வெட்டியுள்ளார், முத்துப்பேச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து காளிமுத்து தன் மனைவியை மகன் வெட்டியதாக, கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் மகனின் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் குருசாமி கைது செய்யப்பட்டு, வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையடுத்து, இன்று ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது, இந்நிலையில் குருசாமி குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், அபராத கட்டணமாக ரூ.3000மும் பணம், கட்ட தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.