ராமநாதபுரத்தில் உள்ள பெரிய கண்மாய் பாசன பகுதியில் 2-ம் போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் பெரிய கண்மாயானது வேகமாக நிரம்பியது. அப்போது வைகை அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டு சேமிக்க முடியாமல் 4 கண்மாய் கொள்ளளவுக்கு தண்ணீர் கடலில் சென்று வீணாகியது. பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், நெல் சாகுபடி போக பெரியகண்மாய் பாசன நீரை பயன்படுத்தி இந்த ஆண்டு 2-ம் போக விவசாயம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கண்மாயில் தற்போது 4 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இந்த ஆண்டு ஏறத்தாழ 800 ஏக்கருக்கு மேல் 2-ம் போக சாகுபடி செய்ய முடியும். இதுதவிர, பருத்தி, மிளகாய் பயிர்களும், பயறுவகைகளும் விவசாயிகள் போட்டு வருகின்றனர். இதற்கு தற்போது உள்ள தண்ணீர் முழுமையாக போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை.
பெரிய கண்மாயானது வேகமாக நிரம்பியதால் கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து ஒருமுறை மட்டும் தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்படி பார்த்தால் நமது மாவட்டத்திற்குரிய தண்ணீர் இன்னும் திறக்காமல் வைகை அணையில் உள்ளது.
வைகை அணையில் எவ்வளவு நீர் உள்ளது?
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 68.52 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 357 கனஅடியாக உள்ளது. 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கான மீதமுள்ள தண்ணீரை 2-ம் போக சாகுபடிக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றும் இதன்மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதோடு கோடை காலத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறையாமல் தண்ணீர் தேவைக்கு பயன்படும் என்று விவசாயிகள் கூறினார்கள்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.