நாடு முழுவதும் தொழிலாளர் அமைப்பின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து பணிமனையில் 54 பேருந்துகள் உள்ளது. இதில் 12 பேருந்துகள் நகரப் பேருந்துகளாக உள்ளது. இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் டீசல், பெட்ரோல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பேருந்து வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ராமேஸ்வரம் பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த 54 பேருந்துகளில் தற்போது 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 அரசு பணிமனைகள் உள்ளது. அதில் 315 பேருந்துகள் உள்ளன. இதில் 120 பேருந்துகள் நகர பேருந்துகளாக உள்ளது. இந்த நிலையில் தற்போது வரை 150 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக ராமநாதபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சிப்புளியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் தனியார் பேருந்துகள் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வரை இயக்கப்பட்டன.
விடுமுறை நாளான நேற்று ராமேஸ்வரத்தில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் இன்று கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது இதனால் பயணச்சிறமம் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
தனுஷ்கோடி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் தனுஷ்கோடியில் வசிக்கும் மீனவ கிராம மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது, செயல்படும் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரத்தில் பயணம் முடித்து விட்டு திரும்ப தனது பணிமனைக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.