முதுகுளத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பேரையூரில் அரசு உயர்நிலைப்பள்ளியானது 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2005ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த பள்ளியில் பேரையூர் , பீட்டர் புரம், அய்யனார்புரம், சேராங்கோட்டை, மேட்டுப்பட்டி, செங்கோட்டை பட்டி, சாமிபட்டி, கள்ளிகுளம் கீழவலசை, ஆனையூர், புல்வாய்க்குளம், உசிலங்குளம், கொத்தங்குளம். உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் மாணவர்களின் நலன் கருதி அரசால் உருவாக்கப்பட்டதால் மாணவர்கள் அரசுப் பள்ளியை நாடிவந்தனர். மேலும் பேரையூர் அரசு பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கிராமப்புற மாணவிகள் அதிகம் பயிலும் இப்பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவிகள் திறந்த வெளியையே நாட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் போதிய கட்டட வசதி இல்லாததால் மரத்தடியில் பாடம் கற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதோடு அல்லாமல் பள்ளியை சுற்றி உள்ள சுற்று சுவர் ஆங்காங்கே இடிந்து சேதம் அடைந்துள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
ஆகையால் அரசு அதிகாரிகளும் மாவட்ட கல்வி அதிகாரியும் உடனடியாக பேரையூரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.