தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முட்டை பொரிப்பகத்தில் வனத்துறையினரால் பாதுகாப்பாக குழிதோண்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆமைகள் முட்டையிடும் சீசனானது டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இருக்கும்.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் 5 வகையான ஆமைகள் உள்ளதாகவும், அதிகமான அளவில் ஆமைகள் இப்பகுதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ்கோடி கடற்கரை பகுதி ஆமைகள் முட்டையிடுவதற்கு உகந்த பகுதியாக வனத்துறையால் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் மண்டபம் வனச்சரகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமைகள் முட்டையிட்டு சென்றுள்ளதா என்று கண்காணித்து அவற்றை சேகரித்து செல்வது வழக்கம்.
வனத்துறையினர் சேகரித்த ஆமை முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்துவிட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையிலும் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டுச்சென்ற 12,227 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆமை முட்டையிட்ட நாளில் இருந்து 55 முதல் 60 நாட்களுக்குள் அந்த முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரித்து தானாகவே வெளியே வந்து விடும்.
குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்த பின்னர் இந்த குஞ்சுகள் கடலில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.