கன்னி, சிப்பிபாறை போன்ற நாட்டு இன நாய்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாத்து அதனை வளர்த்து அதன் மூலம் தொழில் செய்து வருமானம் பெற்று வருகிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த குட்டிமணி என்பவர்.
ஒரு காலகட்டத்தில் கன்னி, சிப்பி பாறை போன்ற நாட்டு இன நாய்கள் வேட்டையாடுவதற்கு என பயன்பட்டது. இந்த நாய் இனங்கள் பூர்வீகமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாய் இனங்கள் ஆகும். அதிவேகமாக ஓடக்கூடிய சிறிய விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டது.
தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு நாட்டுநாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி நாய்களை வளர்ப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதுகுறித்து நாய் வளர்ப்பாளர் குட்டிமணி கூறியதாவது:-
" வெளிநாட்டு கலப்பின நாய்களை விட நாட்டு இன நாய்களை வளர்ப்பது எளிதானது, இவை அதிக நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை அதனால் பராமரித்து வளர்க்க கூடிய முறையும் எளிமையாக இருக்கும். ஆனால், வெளிநாட்டு கலப்பின நாய்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஆதலால் பராமரிப்பது மிகவும் கடினம்.
இவை சுமார் 13 -ல் இருந்து 15 ஆண்டுகள் வரை வளரக்கூடியவை நமது உணவு முறையை பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் நீடிக்கும்.
தற்போது என்னிடம் 10 பெரிய நாய்களும் 19 சிறு குட்டிகளும் உள்ளது சிறு குட்டிகளை விற்று அதன் மூலம் வருமானம் பெற்று இந்த நாய்களை பராமரித்து வருகிறேன்.
மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இவை தான் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. வெளியில் செல்லாத நேரத்தில் எந்த வேலையும் இல்லாதபோது, இந்த நாய்களை விற்று பெற்ற வருமானம் மூலம் தான் குடும்பத்தை நடத்த முயன்றது" இவ்வாறு குட்டிமணி கூறினார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.