நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்றவர், மக்களுடன் நான் இருப்பேன் என்று கூறி அந்த வார்டு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பாதபூஜை செய்து நன்றி தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கூட மக்களை சந்தித்து முறையாக நன்றி தெரிக்காக இந்த காலத்தில், தான் தேர்தலில் தோற்றபோதும் மக்களுடன் தான் இருப்பேன் என்று தெரிவித்து, பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பாத பூஜை நடத்தி வணங்கினார்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் வார்டு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட 10-ஆவது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் நம்புராஜன், தான் தோல்வி அடைந்த போதிலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு தான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நன்றியின் விசுவாசமாக எம்.கே. நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெண்கள் மட்டும் தாய்மார்களை சந்தித்து தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் பெண்களின் பாதங்களை கழுவி, பூ போட்டு, பாத பூஜை நடத்தி தனக்கு வாக்களித்தற்கு நன்றி தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்பும் பல்வேறு தரப்பினர், பகுதி மக்களை முறையாக சந்திக்காத இந்த வேளையில், திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நம்புராஜனின் இந்த செயல் அனைவரும் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.