ராமேஸ்வரம் அருகே மண்டபம் உச்சிப்புளி தேசிய நெடுஞ்சாலையில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் பாரத் பெட்ரோலியத்தில் வேலை பார்க்கும் மண்டபத்தை சேர்ந்த வாசு மகன் ஜெகன் (42) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜெகதீஷ் (22) மகேஷ் (18) ஆகிய இருவரையும் பெட்ரோல் பங்கில் இறக்கிவிட சென்ற போது, இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அருகே ராமேஸ்வரத்திற்கு வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் கார் சரசரவென இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மூவருடனும் இழுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தின் வந்த மூவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த விபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாக்கிங் சென்ற ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீதும் கார் மோதியதால் அவர் படுகாயத்துடன் இராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்டபம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் சரக டிஎஸ்பி மற்றும் மண்டபம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, நாகம்மாள், சந்தோஷ்குமார் மோகனப்பிரியா, விஜயலட்சுமி ஆகியோர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமின்றி உயிர்தப்பிய கார் ஓட்டுனர் சம்பத்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.