இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து அரைகுறையாக கட்டப்பட்ட நிலையில் திறக்கப்படாமல் உள்ளது ராமேஸ்வரம் மீன் மார்க்கெட் - விரைவில் நடவடிக்கை எடுத்து மீன் மார்க்கெட்டை திறக்க கோரிக்கை.
ராமேஸ்வரம் என்றாலே கரைவலை மீன்களுக்குத்தான் பொதுமக்களிடையே மிகப்பெரிய கிராக்கி உள்ளது, இந்த நிலையில் தனுஷ்கோடி, கரையூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவர்கள் கரைவலை மூலமாக பிடித்து வரும் மீன்களை ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் வைத்து பொதுமக்களுக்கு காலங்காலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்கக்கூடிய கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்து இருந்தது, அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்காக ஒப்பந்தப் பணி போடப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனியார் ஒப்பந்ததாரரிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மீன் மார்க்கெட் பணி நிறைவடையாமல் இருந்து வருவதால், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சாலை ஓரங்களிலும் மற்றும் கழிவுநீர் ஓடக் கூடிய பகுதிகளில் விற்றுவருவதால், கழிவு நீர் மூலம் நோய் தொற்று என்பதாலும் மீன்களை வாங்கிச் செல்வதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இதனால் உடனடியாக மீன் மார்க்கெட் கட்டும் பணியை துரிதப்படுத்தி தாமதம் இல்லாமல் கட்டி முடிக்க தனியார் ஒப்பந்ததாரரிடம் நகராட்சி நிர்வாகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நான்கு பக்கச் சுவர்கள் கட்டிமுடிக்க இரண்டு வருடங்களா? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.