இலங்கை சிறையில் உள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரி மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.
இதையடுத்து அவருடைய காவல்நீட்டிப்பு வருகின்ற மே 12ஆம் தேதி வரை நீடித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2019 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரியும், விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பாத மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இதில் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள், மீனவப் பெண்கள் குடும்பங்களுடன் 300 கற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.