நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம்
ஈரோடு செல்லும் வழியில் கூட்டப்பள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு, பெருமாள் என்ற நபர் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் வேலையை இழந்துள்ளார். அதன்பின் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால், உணவுக்கே வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஏதாவது சுயமாக தொழில் செய்யலாம் என்று முடிவு செய்து முதலில் வீதி வீதியாக சென்று டீ, போண்டா வகைகளை விற்று வந்துள்ளார். நாளடைவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்போது தள்ளுவண்டியில் ஒரு சிறிய கடை வைக்கும் அளவிற்கு முன்னேறி வந்துள்ளதாக கூறுகிறார்.
இதுகுறித்து பெருமாளிடம் நாம் கேட்டபோது, "கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தேன். செய்துகொண்டிருந்த வேலையும் கைவிட்டது. கூலி வேலைக்கும் சென்றேன். ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை. இதனால், நமக்கென்று ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று தனியாக டீ விற்கும் வேலையை ஆரம்பித்தேன். தற்போது, கடை வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்.
இங்கு டீ, போண்டா வகைகள், முதல் பரோட்டா, இட்லி,தோசை வரை பல உணவுகளை தற்போது விற்று வருகிறேன். இதற்குக்காரணம் கொரோனா. கொரோனா ஊரடங்கு வரவில்லை என்றால் ஏதோ ஒரு இடத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்திருப்பேன். ஆனால், இன்று கடைக்கு வாடகை செலுத்தினாலும் சுயமாக தொழிலை தொடங்கி நல்லபடியாக செய்து வருவதற்கு கொரோனா தான்" என்று கூறினார்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.