நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாங்குட்டைபாளையம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு அப்பள்ளி மாணவர்கள் உடலுக்கு சத்தான உணவுகளான பாரம்பரிய உணவுகளை செய்து உணவுத் திருவிழா போல் கொண்டாடினார்கள்.
உலக ஆரோக்கிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான வழிமுறைகள் பின்பற்றுகிறோமா என்பது கேள்வி குறி தான்?
ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு சமச்சீரான உணவு முறை கட்டாயமாகத் தேவைப்படுகிறது. தினமும் மூன்று முறை ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நமது பெரும்பாலான உணவுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதாவது பாரம்பரிய உணவு வகைகள்,கம்பு, கேழ்வரகு,ராகி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரோட்டீன் அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றை உண்ணுதல் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ முடியும். ஆனால் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவதில்லை.
இதனால் பாரம்பரிய உணவுகளை நம் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கு சிறு வயதிலேயே எடுத்து செல்லும் வகையில் RTS திட்டத்திலிருந்து HLFL மற்றும் LLF இருந்து கார்த்திகா,நர்மதா என்ற ஆசிரியர்கள் உதவியுடன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி சேர்ந்து பள்ளி மாணவர்களை பாரம்பரிய உணவுகளான சிறு தானியங்கள் முதல் பழங்கள் வரையில் பெற்றோர்கள் உதவியுடன் செய்து எடுத்த வந்து உணவுத் திருவிழா போன்று கொண்டாடினார்கள்.
மேலும் இந்த உணவுத் திருவிழாவில் சுமார் 58 வகையான உணவுகளை செய்து அசத்தி இருந்தனர். இதில் 8-வது வார்டு கவுன்சிலர் தினேஷ் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
இதுபோன்ற உணவு பழக்க முறைகளை படிக்கும் காலத்திலே கற்றுக் கொடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு வழியாக இருக்கும். மேலும் அவர்களும் இதுபோன்ற உணவுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் தினமும் இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.